கூட்டணிக்கு எதிராக கம்யூனிஸ்ட் போட்டி

புதுடெல்லி,மே 15 – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) எதிராக எதிர்க்கட்சிகளால் உருவானது இண்டியா கூட்டணி. இதன் உறுப்பினர்களான சுமார் 26 கட்சிகளில் இடதுசாரி கட்சிகளும் உள்ளன. இவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உ.பி.யில் போட்டியிடவில்லை. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கூட்டணியின் முக்கிய உறுப்பினர் களான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடுகிறது.
உ.பி.யில் ராபர்ட்கன்ச், லால்கன்ச், கோசி, பாந்தா, பைசாபாத், தவுர்ஹரா ஆகிய 6 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடுகிறது. உ.பி.யின் தனித் தொகுதியான ஷாஜஹான்பூரிலும் இக்கட்சி வேட்பாளரை அறிவித்தது. ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் அங்கு போட்டியிடவில்லை. துக்தி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் உ.பி.யின் முன்னாள் மாநிலச் செயலாளருமான கிரிஷ் சந்திரா கூறும்போது, “சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் போல் அவரது மகன் அகிலேஷின் அணுகுமுறை இல்லை. நாங்கள் இண்டியா கூட்டணியின் சக உறுப்பினராக இருந்தும் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கும் அகிலேஷ் முன்வரவில்லை. எனவே, உ.பி.யில் எங்களுக்கு இருக்கும் மக்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக நாங்கள்
போட்டியிடுகிறோம்” என்று தெரிவித்தார்.உ.பி.யில் கடைசியாக இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யாக 1991-ல் விஸ்வநாத் சாஸ்திரி காஜிபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன் 1989 மக்களவைத் தேர்தலில் மித்ரசென் யாதவ் பைசாபாத் எம்.பி.யானார் இவரது மகன்அர்விந்த்சென் யாதவ் பைசாபாத்தில் தற்போது போட்டியிடுகிறார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அர்விந்த்சென், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளளின் வாக்குகளை அதிகமாகப் பிரிக்கும் நிலை உள்ளது.1920-ல் பைசாபாத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு உருவானது. இப்பகுதியின் அயோத்தி, அக்பர்பூர் ஆகிய தொகுதிகளில் 1967 மற்றும் 1989-ல் இக்கட்சியினர் எம்எல்ஏக்களாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்