கூட்டணி வலுவடையாமல் இருக்க காங்கிரசே காரணம்: நிதிஷ் குமார் விமர்சனம்

பாட்னா: நவம்பர். 3 – இண்டியா கூட்டணி சமீப காலமாக வலுப்பெறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நிதிஷ் குமார் பேசியதாவது: ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருகிறது. மாநில தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் ஆர்வம் செலுத்தி வருவதன் காரணமாக சமீப காலமாக இண்டியா கூட்டணியின் செயல்பாடு வேகம் பெறாமல் தொய்வடைந்து போயுள்ளது.
பாஜகவை ஆட்சியில் இருந்துஅகற்றி நாட்டை காக்கவே இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அதற்காகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த பேரணியை இங்கு நடத்துகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்குமுக்கிய பங்களிப்பை வழங்ககூட்டணிக் கட்சியினர் ஒப்புக்கொண்ட போதிலும் அந்த கட்சி5 மாநில தேர்தல்களில் மட்டுமேஅதிக ஆர்வம் காட்டி வருகிறது.இதனால்தான் இண்டியா கூட்டணியின் வேகம் தடைபட்டுள்ளது. எனவே, தேர்தலுக்கு பிறகே இண்டியா கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை பாஜக தந்திரமாக கையாண்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்பதற்காக நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதி உண்மையை மறைக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது.மத்திய அரசு தற்போது ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் அவர்களின் சாதனைகள் மட்டுமே பட்டியலிடப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் கட்சிகள் செய்த நல்ல பணிகளுக்கு போதுமான விளம்பரம் கிடைக்காத நிலை உள்ளது.இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.