கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பிஜேபி முடிவு

புதுடெல்லி மார்ச் , 17 – டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உரையுடன் துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், டெல்லியின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த அறிவிப்புகள் அதிக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டெல்லியில் அரசு பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக வெளிநாடு அனுப்பும் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா, அண்மையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.