கெஜ்ரிவால் 7வது முறையாக ஆஜராகவில்லை

டெல்லி: பிப். 26: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராக அமலாக்க துறை 7ஆவது முறையாக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்றும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கடந்த 2021ஆம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் டெல்லியில் தனியாரும் உரிமம் பெற்று மதுபானங்களை விற்கலாம் என்று பாலிசி முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், இதில் ஊழல் நடந்ததாகவும் இதனால் அரசுக்கு ரூ2,800 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகும் அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தொடர்ந்து டெல்லி மாநில துணை நிலை ஆளுநரின் அறிக்கையின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அமலாக்கத் துறை: இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சில மாதங்களில் இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. இருப்பினும், இது தொடர்பான வழக்கை ஆம் ஆத்மியை விடாமல் தொடர்ந்தே வருகிறது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த குற்றச்சாட்டில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே 6 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், ஒரு முறை கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகும் போது அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாலேயே அவர் ஆஜராகாமல் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை தான் கைதானால் அடுத்து யார் முதல்வர் பொறுப்பிற்கு வர வேண்டும் என்பதையும் கெஜ்ரிவால் முடிவு செய்து வைத்துள்ளார்.
கெஜ்ரிவால்: தன்னை கைது செய்துவிட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக முயல்வதாக கெஜ்ரிவால் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், டெல்லி சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தி வெற்றி பெற்றார். இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலுக்கு 7ஆவது முறையாகச் சம்மன் அனுப்பி இருந்தது. இன்று திங்கள்கிழமை அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.