கெஜ்ரி பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: தமது டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 25 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியிருப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு 2-வது முறையாக ஆட்சியில் நீடித்து வருகிறது. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 67 இடங்களில் வென்று முதல் முறையாக டெல்லி ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் 8 இடங்களை வென்ற பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலும் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாஜக தரப்பில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனர். அப்போது, கெஜ்ரிவாலை விரைவில் கைது செய்து விடுவோம். கெஜ்ரிவால் கைதுக்குப் பின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்துவிடுவோம். தற்போது வரை 21 எம்.எல்.ஏக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமும் பேசுவோம். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்த்துவிடுவோம். அதற்கு பிறகு நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள். பாஜக சார்பாக தேர்தலிலேயே போட்டியிடலாம். உங்களுக்கு ரூ. 25 கோடி தரப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் 21 எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டதாக கூறியிருக்கின்றனர். பாஜகவினர் தொடர்பு கொண்ட 7 எம்.எல்.ஏக்களும் பேரத்துக்கு பணிய முடியாது என தெரிவித்துள்ளனர்.