கேஎஸ்ஆர்டிசி பஸ் மினி பஸ் மோதல் ஒருவர் பலி 3 பேர் காயம்

பெங்களூர் : நவம்பர். 9 – கே எஸ் ஆர் டி சி பேரூந்து மற்றும் மினி பேரூந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயங்களடைந்துள்ள சம்பவம் சிக்கபள்ளாபுராவின் சிந்தாமணி தாலூகா சென்னசந்திரா கேட் அருகில் நடந்துள்ளது . கைவாரா பகுதியை சேர்ந்த இல்லு (40) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தவர். இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாயுள்ளது. இந்த மோதலின் விளைவாக மினி பேரூந்து அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த விபத்து குறித்து சிந்தாமணி கிராமந்தர போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. இந்த விபத்தால் சிந்தாமணி மற்றும் பெங்களூருக்கு இடையேயான சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது . பின்னர் போலீசார் தலையிட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி சுமுக போக்குவரத்திற்கு வழி செய்து கொடுத்துள்ளனர். இதே போல் டேங்கர் மற்றும் கரும்பு நிரம்பிய ட்ராக்டர் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்து கிலோ மீட்டருக்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் கொல்லரா அருகில் நடந்துள்ளது . இரண்டு பக்கமும் செல்ல வேறு வழிகள் அல்லது பாதைகள் இல்லாமல் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் இரு பக்கமும் தேங்கி நின்றிருந்தன. ஹூப்ளி சொல்லப்புரா தேசிய நெடுஞசாலை 218 வை இணைக்கும் பாலம் இது என்ற நிலையில் கிருஷ்ணா நதி மீது கட்டியுள்ள 3 கிலோ மீட்டர் நீளமான இந்த குறுகிய பாலத்தில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்தில் எவ்வித உயிர்சேதமும் யாருக்கும் ஏற்படவில்லை. தற்போது விபத்துக்குள்ளான ட்ராக்ட்ர் மற்றும் டேங்கரை சாலையிலிருந்து அகற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.