
மும்பை, அக். 8- ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டு சுப்மன் கில், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய ஒரு நாள் அணியில் இருந்தும் ரோஹித் சர்மா விராட் கோலி ஆகியோர் விரைவில் நீக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கேப்டன் பதவி சென்ற பிறகு முதன் முறையாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா தொடர் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் தனிப்பட்ட முறையில் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதை நினைத்து நான் பெருமையாக கொள்கின்றேன். எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ,அப்போதெல்லாம் நான் அதை சரியாக பயன்படுத்த முயற்சி செய்வேன்.அணியின் வெற்றிக்காக சிறு காரணமாக இருப்பது நினைத்து நான் பெருமை கொள்கின்றேன்.ஆஸ்திரேலியா தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன். எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு செல்வதும், அங்கு கிரிக்கெட் விளையாடுவதும் எப்போதுமே ஒரு சவாலான விஷயமாக தான் இருக்கும். அங்குள்ள ரசிகர்களும் கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது ஒவ்வொரு விதமான சவால்கள் எங்களுக்கு இருக்கும்.எங்களுக்கு எதிராக அவர்கள் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். நான் ஆஸ்திரேலியாவுக்கு பலமுறை சென்று விட்டேன். இதனால் அங்கு இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கின்றேன். இம்முறையும் நாங்கள் அங்கு சென்று என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து முடிவை எங்களுக்கு சாதகமாக மாற்றவும் என்று நம்பிக்கை கொள்கிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார். கேப்டன் பதவியை விட்டு சென்று விட்டாலும் அணியின் வெற்றிக்காக தான் எப்போதும் போல் முயற்சி செய்வேன் என்பதை ரோகித் சர்மா தெளிவு படுத்தியுள்ளார்.

















