கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: மே 23: கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று (மே. 23) கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.
கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது. இதனிடையே கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று (மே.,23) கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கையை முன்னிட்டு, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மாநில கட்டுப்பாட்டு அறை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இது தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்பு, தரவு மேலாண்மை, மருத்துவமனை சேவைகள், மருந்து கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றை நிர்வகிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு, சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு 0471-2302160, 9946102865, மற்றும் 9946102862 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார். கேரளாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தெரிவித்துள்ளது.