கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்

கேரள ஆக.19- மாநிலத்தில் மழை காலங்களில் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கம் போல் பெய்யாமல் ஏமாற்றினாலும், பருவ மழை பெய்ய தொடங்கிய போது அங்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவியது. மேலும் அங்கு பறவை காய்ச்சலும் பரவியதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. கண்ணூர் மாவட்டம் கேணிச்சார் மலையம்பாடி பகுதியில் உள்ள 2 பன்றி பண்ணைகளில் மாவட்ட கால்நடை நல அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பண்ணைகளை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பரப்பளவை பாதிக்கப்பட்ட பகுதியாகவும், 10 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளை கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் பன்றி இறைச்சி வினியோகம் செய்யவும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு பன்றிகளை கொண்டு செல்வதற்கும், பிற பகுதிகளில் இருந்து கண்காணிப்பு மண்டல பகுதிகளுக்கு பன்றிகளை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 3 மாத காலம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆப்ரிக்க காய்ச்சல் பாதிப்பு இருக்கும் 2 பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் கொல்ல கண்ணூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமின்றி கொல்லப்படும் பன்றிகளின் உடல்களை விதிமுறைப்படி அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவியிருப்பது அந்த மாவட்டம் மட்டுமின்றி, கேரள மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.