கேரளாவில் ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் 181 பன்றிகள் பலி

திருவனந்தபுரம்:நவம்பர். 5 – கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பன்றிகள் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு ஒவ்வொன்றாக பலியாகி வந்தது. இதையடுத்து கோட்டயம் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த சோதனையில் இறந்த பன்றிகளுக்கு, ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நோய் பாதித்த பன்றிகளை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டது. அதற்குள் கோட்டயம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்ப்புகரையில் 67 பன்றிகளும், மூலக்குளத்தில் 33 பன்றிகள் உள்பட மொத்தம் 181 பன்றிகள் பலியானது. அவற்றை கால்நடை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் அழித்தனர். இதையடுத்து இந்த நோய் பாதிப்பு மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க பன்றிகள் இறந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பன்றி பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளை கண்காணிக்கவும், நோய் பாதித்த விலங்குகளை உடனடியாக அழிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையினரும் செய்து வருகிறார்கள்.