கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு

திருவனந்தபுரம்: செப்.22 கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதில் நிபா வைரஸ் பாதித்து முதலில் பலியான மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர், 39 வயது மதிக்கத்தக்க நபர் என மேலும் இருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புக்குள்ளான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொது மக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. டியூசன் மற்றும் பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. தொற்று பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.