கேரளாவில் கனமழை வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம், அக்.16- கேரள மாநிலத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம் பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு அடுத்த 24 மணி நேரங்களில் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 10 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் அறிவித்துள்ளது. கேரளா – லட்சத்தீவு கடற்கரை பகுதிகளில் தாழ்வு நிலை உருவாகி படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. காற்று மேற்கு நோக்கி நகர்வதால், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 17 வரை கண்ணூர், கோழிக்கோடு மாவட்டம் தவிர மற்ற பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா- லட்சத்தீவு கடற்கரையில் மீன் பிடிக்க அக்டோபர் 18 வரை அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக திருவனந்தபுரம் மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. என்று மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் குவாரி, மற்றும் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் இறங்க தடை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யக்கூடாது. கடலோர பகுதிகளுக்கு அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக கடலோர பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அவசரகால மேலாண்மை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கர்நாடகாவிலும் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக குடகு ,ஹாசன், சிக்மகளூர், ஷிமோகா, பகுதிகளில் மழை பெய்யும்.தலைநகர் பெங்களூரில் மாலையில் லேசான மழை பெய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.