கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை- பினராயி விஜயன்

புது தில்லி
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த மாதம், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என்று உறுதிபட கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது, அது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்க இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினையில் கேரள அரசு தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.