கேரளாவில் பெரியார் சிலை அமைச்சர் ஏ.வா. வேலு ஆய்வு

திருவனந்தபுரம், நவ. 16- வைக்கம் வீரர் என்று அழைக்கப்படும் தந்தை பெரியாருக்கு கேரளா மாநிலம், வைக்கத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு அரசு ரூ.8.14 கோடி மதிப்பில் சீரமைத்து வருகிறது. கேரளா மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பலமுறை கேரளா, வைக்கம் சென்று சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று வைக்கம் சென்று சீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தந்தை பெரியாரின் நினைவிடம் தரைதளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதில், நூலகம் 2582 சதுரடி பரப்பளவிலும், அருங்காட்சியகம் 1891 சதுரடி பரப்பளவிலும் அமைந்துள்ளது.
ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 28 அன்று துவங்கப்பட்ட சீரமைப்புப் பணிகள் நவம்பர் 30 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். 1891 சதுர அடியில் அமைந்திருந்த அருங்காட்சியகத்தை தரை தளம் மற்றும் முதல் தளம் 3025 சதுர அடியில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தந்தை பெரியார் நினைவிடம் சென்ற உடனே ஒவ்வொரு பணியாக நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
நூலகம் மற்றும் அருங்காட்சியகம் கட்டட பூச்சு பணி மற்றும் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சிமெண்ட், மணல் ஆகியவற்றின் தரத்தினை ஆய்வு செய்த அமைச்சர் வேலு, டைல்ஸ் பதிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். சுற்றுச்சுவர் மற்றும் இதர பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.