கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா- 3ஆவது உயிரிழப்பு

திருவனந்தபுரம்: ஜூலை 6: நமது அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், சில முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கேரளாவில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளதால், தமிழக மக்களும் அச்சத்தில் உள்ளனர். இது மக்களிடையே எப்படி பரவும் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த காலத்தில் பல வகையான பாதிப்புகள் திடீர் திடீரென ஏற்படுகிறது. அவை சில நேரங்களில் மோசமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. அப்படி தான் ஒரு வகை அமீபா பாதிப்பு இப்போது பகீர் கிளப்பி வருகிறது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை மூளை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மூளையை உண்ணும் அமீபா: இந்த அரிய வகை நோய் குழந்தைகளை தாக்கவே வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகளை பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.. குறிப்பாக அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்குள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார். அசுத்தமான நீரில் சான் இந்த மூளையை நேரடியாக பாதிக்கும் அமீபா எளிதாக வளரும். எனவே, இந்த நோய் பரவுவதைத் தடுக்க நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்து கொண்டு, நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை விளக்கியுள்ளார்.
மூன்றாவது மரணம்: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் இந்த மூளையை உண்ணும் அமீபா மூன்றாவது மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கு முன்பு கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு பேர் இந்த அமீபா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இப்போது கோழிக்கோடு பகுதியில் 3வது மரணம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 14 வயதான மிருதுல் என்ற சிறுவன் ஜூன் 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனில்லாமல் அந்த சிறுவன் சமீபத்தில் உயிரிழந்தான். மூளையை உண்ணும் அமீபா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அது பலன் தரவில்லை என்றே கூறப்படுகிறது.