கேரளாவில் 2-ந்தேதி வரை கனமழை: மஞ்சள் எச்சரிக்கை

கேரளாசெப்.30-
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக பேப்பாறை நெய்யார் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடல் கொங்கன்-கோவா கடற்கரை மற்றும் வடகிழக்கு பங்கக்கடல் பகுதியில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 2-ந்தேதி வரை கன மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், ஆலப்புழா, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் ‘ஆரஞ்சு அலர்ட்’ (11 செ.மீ முதல் 20 செ.மீ., ) விடுத்துள்ளது.
கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை (6 செ.மீ முதல் 11 செ.மீ வரை) விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் மக்களை கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களை கூடுதல் விழிப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளது.