கேரளாவில் 7 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

திருவனந்தபுரம்: நவ.16-
கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஏற்கனவே கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் இப்போது மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதார துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தண்ணீர் தேங்கும் இடங்களையும், கொசு உற்பத்தியாகும் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.