கேரள குண்டுவெடிப்பு பலி அதிகரிப்பு

திருவனந்தபுரம்,நவ. 17-
கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியான களமசேரியில் ஒரு அரங்கத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெபக் கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் மாநாடு 29ம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதில் சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அரங்கத்திற்குள் 3 இடங்களில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தொடர்ந்து அங்கு தீயும் பிடித்து எரிந்தது.குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் கருகி இறந்தார். அவர் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ் (55) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 51 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி (52),மலையாற்றுர் பகுதியைச் சேர்ந்த லிபினா (12) என்ற சிறுமி, களமச்சேரியை சேர்ந்த மோலி ஜாய்(61), மலயாட்டூரைச் சேர்ந்த 45 வயதான சாலி பிரதீபன் என்ற பெண் ஆகியோர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இந்த நிலையில் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையே ஜெபக்கூட்டத்தில் குண்டு வைத்ததாக டொமினிக் மார்ட்டின் (57) என்பவர் நேற்று முன்தினம் திருச்சூர் கொடகரை போலீசில் சரண் அடைந்தார். போலீசில் சரணடைவதற்கு முன்பாக அவர் அதற்கான காரணத்தை விளக்கி தனது முகநூலில் வீடியோ ஒன்றையும வெளியிட்டார்.குண்டுவெடிப்பு நடத்திய பின்னர் அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்திருந்தார். அதை போலீசாரிடம் ஒப்படைத்தார். டொமினிக் மார்ட்டினிடம் ஆலுவா போலீஸ் கிளப்பில் வைத்து போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். கேரள சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் தலைமையில் கேரள போலீசாரும், என்ஐஏ உள்பட மத்திய உளவுத்துறை போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். டொமினிக் மார்ட்டின் மீது உபா சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.