கேரள முதல்வர் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்:டிச. 22- பொறுப்பில்லாமலும், அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறியும் செயல்படும் கவர்னர் ஆரிப் முகம்மது கானை திரும்ப அழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும், அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் கோழிக்கோடு பல்கலையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்த கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து பல்கலை வளாகத்தில் எஸ்எப்ஐ அமைப்பினர் பேனர் கட்டினர்.
அதை போலீசை வைத்து கவர்னர் அவிழ்த்தார். இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கவர்னர் ஆரிப் முகம்மது கான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார். அரசியல் சாசன பணிகளை முறையாக செய்வதில்லை. அடிக்கடி புரோட்டோக்காலை மீறுவதால் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆட்சிப்பணிகள் சுமூகமாக நடைபெற ஆரிப் முகம்மது கானை கவர்னர் பதவியிலிருந்து திரும்ப அழைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.