கேரள லாட்டரியில் புதுச்சேரி நபருக்கு ரூ.20 கோடி பம்பர் பரிசு

திருவனந்தபுரம்:பிப்.3- கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24ஆம் தேதி நடந்தது. முதல் பரிசான ரூ.20 கோடி XC 224091 என்ற எண்ணுக்கு கிடைத்தது.
இந்த டிக்கெட் பாலக்காட்டை சேர்ந்த ஏஜென்ட் மூலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே உள்ள கடையில் விற்பனையானது . முதல் பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து குலுக்கல் நடந்து முடிந்த 9 நாட்களுக்குப் பின் தற்போது தெரியவந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான ஒரு தொழிலதிபர் தான் அந்த அதிர்ஷ்டசாலி ஆவார். அவர் தனது பெயர், விவரத்தை வெளியிட மறுத்துவிட்டார்.
நேற்று தன்னுடைய நெருங்கிய உறவினர்களுடன் திருவனந்தபுரத்திலுள்ள லாட்டரித் துறை அலுவலகத்திற்கு வந்து பரிசு விழுந்த டிக்கெட்டை ஒப்படைத்தார். பரிசு விழுந்த இந்த அதிர்ஷ்டசாலி சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கும் வந்தார். இங்கும் தரிசனத்தை முடித்த பின்னர் கோயிலுக்கு அருகிலுள்ள கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியுள்ளார். அந்த லாட்டரிக்குத் தான் தற்போது முதல் பரிசு ரூ.20 கோடி கிடைத்துள்ளது. ஒன்றிய, மாநில அரசு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் போக இவருக்கு ரூ.12.60 கோடி கிடைக்கும்.