கே.ஆர்.புரம், மகாதேவப்புராவில்குடிநீர் பிரச்னை

பெங்களூரு, செப். 6: கே.ஆர்.புரம், மகாதேவப்புரா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள‌து.
பெங்களூரு ராமமூர்த்திநகர், கல்கெரே, ஹோரமாவு, கே.ஆர்.புரம் உள்பட இதனை சுற்றி உள்ள பெல்லந்தூர், பைரதி, காடுபீசனஹள்ளி, துபரஹள்ளி, முன்னேகொலலு, தொட்டகண்ணஹள்ளி, ஹரலூர், கசவனஹள்ளி, போகனஹள்ளி, வர்த்தூர், மகாதேவப்புரா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீர் குறைவதே குடிநீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாகும்.
கே.ஆர்.புரம் மற்றும் மகாதேவபுராவில் ஆழ்குழாய் கிணறுகள் போதிய அளவு தண்ணீர் இல்லை. பெங்களூரு மாநகராட்சி வரம்பிற்குள் உள்ள, 110 கிராமங்களில், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான, காவிரி நீர் திட்டம் நிறைவேற்றப்படாததால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் சில குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கவில்லை. காவிரி நீர் இல்லாமல் ஒரு டேங்கருக்கு ரூ.500 முதல் ரூ.600 ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது. வாட்டர் டேங்கரில் கொண்டு வரப்படும் தண்ணீரின் திடீர் விலை உயர்வு மக்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது. பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீரின்றி வற்றி உள்ளதால், குடிநீர் பிரச்னை தீவிரமடைந்துள்ளது என்றார் போயஸ் கார்டனில் வசிக்கும் மஞ்சுளா.
மேலும், குடிநீர் பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு காணாமல் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களுக்கு பதில் கூறி வருகின்றனர். எங்கள் ஊராட்சிகளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை குறித்து, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. என்றாலும் அதற்கு எந்த பயனும் இல்லை என்றார்.பல மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சில ஊராட்சிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலையில் உள்ளோம்.ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பதால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் தண்ணீர் பிரச்னையை தீர்த்து, குடிநீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னெகொலாலுவை சேர்ந்த துருகேஷ் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலையிலும் அதிகாரிகள் அதைக் கண்டுகொள்வதில்லை. பலரது வீடுகளில் உள்ள ஆழ்துளை குழாய் கிணறுகள் வற்றிவிட்டன.
டேங்கர் தண்ணீரை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அங்குள்ள ஆழ்குழாய் கிணறு தண்ணீர் வற்றினால், டேங்கர் தண்ணீர் வினியோகமும் நின்று நிலைமை மோசமாகி விடும் என்றார் ஆம் ஆத்மா கட்சி தலைவர் முனேந்திரா.
எனவே மாநகராட்சி இதனை கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.