கே.ஜி.எப்‌ ராக்கிபாய் போல் பிரபலமாக 5 காவலாளிகளை கொன்ற வாலிபர்

திருப்பதி: செப்.3- மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் 19-ந்தேதி இரவு வரை காவலர்கள் 3 பேர் அடுத்தடுத்து தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தொடர் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 2-வதாக கொலை செய்யப்பட்ட காவலாளி ஒருவரின் செல்போனை கொலையாளி தூக்கி சென்றது தெரியவந்தது. அதன் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். மேலும் சாகரில் இரவு நேர பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தினர்.
அந்த செல்போன் நம்பர் மூலம் கொலையாளியை பின் தொடர தொடங்கினர். போலீஸ் பாதுகாப்பு அதிகரித்ததால் கொலையாளி போபால் நகருக்கு சென்றான். தனிப்படை போலீசார் நள்ளிரவு போபால் நோக்கி விரைந்து சென்றனர். அந்த நேரத்தில் கொலையாளி போபால் நகரில் உள்ள ஒரு பளிங்கு கடையில் இருந்த காவலாளி சோனு வர்மா (27) என்பவரை பயங்கரமாக தாக்கினார். அங்கிருந்த பளிங்கு கற்களை எடுத்து காவலாளி தலையில் அடித்தான். இதில் பளிங்கு கல் இரண்டாக உடைந்து விழுந்தது. உடைந்த ஒரு துண்டை மீண்டும் எடுத்து சினிமாவில் வரும் காட்சியை விட பயங்கரமாக அடித்தான். இதில் அந்த காவலாளி பரிதாபமாக இறந்தார்.
கொலையாளி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் காவலாளியை பளிங்கு கற்களால் அடித்து கொன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கொலையாளி தனது கொலையை அரங்கேற்றி வருவதால் அவனை கண்காணிக்க தொடங்கினர். 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கொலையாளியின் செல்போன் செயல்பட தொடங்கியது. இதன் மூலம் போபால் நகரில் ஒரு சாலையில் உலா வந்து கொண்டிருந்த கொலையாளியை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் கொலையாளி ஷிவ் பிரசாத் துரூவ் (வயது 19) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் காவலர்களை கொடூரமாக கொலை செய்தது உறுதியானது.
அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சாகர் நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கண்களில் கொலை வெறியுடன் மிருகத்தனத்திலிருந்த கொலையாளி சினிமா பாணியில் சிரித்தான். இன்று இரவு ஒரு கொலை செய்ததைதான் நீங்கள் கண்டுபிடித்தீர்கள். நான் இன்னொருவரையும் கொன்று போட்டு உள்ளேன் எனக் கூறினார். அதை கேட்டு போலீசார் திகைத்துப் போனார்கள். உடனடியாக அவர் சொன்ன இடத்தை பார்வையிட மற்றொரு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு கொடூரமாக கொலை செய்து வீசப்பட்ட காவலாளி வர்மா என்பவர் பிணமாக கிடந்தார். இதன் மூலம் ஷிவ் பிரசாத் துரூவ் ஒரே இரவில் 2 காவலாளிகளை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு நேரங்களில் 5 காவலாளிகளை கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஷிவ்பிரசாத் துரூவ் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் கேஜிஎப்-2 படத்தை பார்த்து ராக்கிபாய் போல கேங்ஸ்டர் ஆக வேண்டும் என முடிவு செய்தேன். அதில் வரும் ராக்கி பாய் கெட்டப் என்னை மிகவும் ஈர்த்தது. அதேபோல எனது நடை செயல்பாடுகளை மாற்றிக் கொண்டேன். நான் 65 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பு இந்த உலகம் என்னை விரைவில் அறிந்து கொள்ளும் என்று என் தாயிடம் சபதம் செய்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டேன். தாய்க்கு அளித்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக முதலில் எனக்கு அதிக பணம், 2 துப்பாக்கி போன்றவை தேவைப்பட்டது. இதற்காக தமிழகம், கேரளா, புனே, கோவா ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் வேலை செய்தேன். இந்த உலகம் என்னை விரைவில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரவு நேரங்களில் காவலாளிகளை குறி வைத்து அடித்தே கொன்றேன். அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டேன் என சர்வ சாதாரணமாக சினிமா வில்லன் போல கூறினான். ஷிவ் பிரசாத் துரூவ் நல்ல மனநிலையில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். சினிமா படத்தை பார்த்து அவரது சிந்தனை மாறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது