கொடூர விபத்து: கர்ப்பத்தில் இருந்த குழந்தை உட்பட 3 பேர் சாவு

பெங்களூர்: செப்டம்பர். 17 – சிக்கபள்ளாபுரத்தின் ராமதேவரகுடி அருகில் தேசிய நெடுஞசாலை 44ல் இன்று காலை நடந்த தொடர் சாலை விபத்தில் கர்ப்பத்திலிருந்த குழந்தை உட்பட மூன்று பேர் இறந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதுடன் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது இன்று காலை 8 மணியளவில் அதிக வேகமாக வந்த கேன்டர் லாரி மோதியுள்ளது. பின்னர் லாரி ராமதேவரகுடியிலுள்ள பிரணவ் என்ற ஓட்டலுக்குள் புகுந்துள்ளது. நெடுஞசாலையிலிருந்து ஓட்டலுக்குள் கேன்டர் லாரி புகுந்த காட்சிகள் அருகில் உள்ள சி சி டி விக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஓட்டல் பாதுகாப்பு ஊழியர் நாராயணசாமி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஜனார்தன் ஆகியோர் இறந்து போயுள்ளனர். தவிர கர்ப்பிணி ஒருவர் படு காயமடைந்த நிலையில் கருவில் இருந்த குழந்தை இறந்துள்ளது. அதே வேளையில் கர்ப்பிணியின் மற்றொரு குழந்தை தப்பித்துள்ளது . காயமடைந்தோரை சிக்கபள்ளாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறுக்கே வந்த காரை சமாளிக்க முயன்று கேன்டர் லாரி ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது. ஓட்டல் எதிரில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஐந்து கார்கள் நசுங்கி போயுள்ளன. சம்பவ இடத்திற்கு சிக்கபள்ளாபுரா எஸ் பி டி எல் நாகேஷ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கேன்டர் லாரியை வசத்தில் எடுத்துள்ள போலீசார் அதன் ஓட்டுநர் அஜீத் என்பவனை கைது செய்துள்ளனர். பேரேசந்திரா போலீஸ் நிலையத்தில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக எஸ் பி நாகேஷ் தெரிவித்தார்.