கொரோனாவுக்கு மத்தியில் எஸ்எஸ்எல்சி தேர்வு

பெங்களூரு, ஜூலை 22- கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று 2-வது நாளாக எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நடந்தன. கடந்த 19ம் தேதி முதல் நாள் தேர்வு வெற்றிகரமாக நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று 22ஆம் தேதி தேர்வுகள் நடந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மத்தியில் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பார்வையிட்டனர். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் திங்களில் நாட்டில் முதன் முறையாக கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டு இன்று ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்கு மேல் கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் நாட்டின் முழு வர்த்தகம் , அரசு பணிகள் பலவும் முடங்கிவிட்டது என்றாலும் குறிப்பாக தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதத்தில் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான எஸ் எஸ் எல் சி தேர்வுகள் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நம் கர்நாடக மாநிலம் ஒட்டு மொத்த நாட்டிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் சவால் விடும் வகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கிடையேயும் எஸ் எஸ் எல் சி தேர்வுகளை மிகவும் கச்சிதமாக நடத்தி காட்டியதுடன் தேர்வு முடிவுகளையும் மிகவும் துல்லியமாகவே வெளிப்படுத்தியிருப்பது ஒருவகையில் நாட்டில் எந்த மாநில அரசும் சாதித்திராத ஒன்றாகும் . இந்த நிலையில் இந்தாண்டு எஸ் எஸ் எல் சி தேர்வுகளும் மாநிலம் முழுக்க கடந்த 19 அன்று துவங்கியது.அனைத்து பாடங்களுக்கும் மிக குறுகிய கால கட்டத்தில் வெற்றிகரமாக தேர்வுகளை முடித்திருப்பது நம் மாநில உயர்கல்வி துறையின் மிக சிறந்த சாதனை என்றே கூறலாம். இந்த நிலையில் இன்று மாநிலம் முழுக்க நடந்த எஸ் எஸ் எல் சி தேர்வுக்கு பெரும்பாலும் அனைத்து மாணவ மாணவியரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தவிர மாநில உயர் கல்வி துறையின் உத்தரவின்படி அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா விதிமுறைகள் மிகவும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு தேர்வுக்கு வரும் மாணவர்களை பரிசோதித்து தேர்வுக்கு அனுமதி அளித்து மீண்டும் இந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கிடையேயும் எஸ் எஸ் எல் சி தேர்வுகளை நடத்தி நம் மாநிலம் நாட்டிற்கே முழு உதாரணமாக விளங்குகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த வகையில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் மாநில கல்வித்துறை அமைச்சர், மாநில எஸ் எஸ் எல் சி தேர்வு ஆணையம் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் என அனைவருக்கும் நன்றி செலுத்தியே ஆக வேண்டும் அப்படி இந்த தேர்வுகள் நடத்தப்படாமலிருந்தால் நிச்சயமாக பல லட்ச மாணவர்களின் எதிர்காலமே குழம்பி போயிருக்கும் என்பது கசப்பான உண்மையாகும்.