கொரோனா பரவல் உச்சம் -ஸ்பெயினில் முகக் கவசம் கட்டாயம்

மாட்ரிட்: ஜன. 11- கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஸ்பெயின் நாட்டில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. அத்துடன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிய மக்களை வலியுறுத்துமாறு அந்த பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஸ்பெயின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. ஆனால் பொதுமக்கள் அதனை சரிவர பின்பற்றாத நிலையில், தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், கிளினிக்குகள், மருந்தகங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஸ்பெய்ன் அரசு கொண்டு வந்துள்ளது. இந்த கட்டுப்பாடு நேற்று (ஜன.10) முதல் அமலுக்கு வந்தது. மேலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருந்தால் அந்தந்த பகுதிகளில் கட்டுப்பாட்டை தளர்த்திக் கொள்ளவும் ஸ்பெயின் அரசு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர் மோனிகா கார்ஸியா, “தொற்று பரவலை குறைத்து பாதிப்புக்குள்ளாகும் மக்களை காப்பாற்ற வேண்டும். முகக்கவசம் அணிவதில் எந்த கஷ்டமும் இல்லை. அது ஒரு அடிப்படையான, எளிமையான ஒரு நடவடிக்கை” என்று தெரிவித்தார்.