கொல்கத்தா உயர் நீதிமன்றம் கேள்வி

கொல்கத்தா: பிப்.21
சந்தேஷ்காலி தீவுப்பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ்
ஆகியார் தாக்கல் செய்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சிவஞானம் முன்னிலையில் நேற்று விசாரைணக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:
சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் மீதுபாலியல் புகார் கூறியுள்ளனர். அங்கு அவர் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அத்தகைய நபர் தலைமறைவாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. ஒரு பகுதியில் ஒட்டுமொத்த மக்களையும் பிணைக் கைதிகளை போல வைத்திருக்கும் நபருக்கு ஆட்சியில் உள்ளவர்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.
மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர்மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பல குற்றங்களை செய்துவிட்டு அவர் தலைமறைவாக உள்ளார். அவருக்கு மாநில அரசு ஆதரவுஅளிக்க முடியாது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு கூறிய தலைமை நீதிபதி சிவஞானம்,
சுவேந்து அதிகாரி, சங்கர் கோஷ் ஆகியோர் சந்தேஷ்காலி தீவுப் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கினார்.