கொல்கத்தா விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் தற்கொலைக்கு முயற்சி

கொல்கத்தா, மார்ச் 28: கொல்கத்தா விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொல்கத்தா விமான நிலையத்தில் பணியில் இருந்த பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்தில் 5-வது நுழைவு வாயில் அருகே பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில்படை காவலர் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், திடீரென்று அவர் வைத்திருந்த துப்பாக்கியால் கழுத்தில் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்த வீரரின் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.