கொளுத்தி போட்ட எடப்பாடி பழனிசாமி! கொழுந்து விட்டு எரியும் காங்கிரஸ்

சென்னை: அக். 12
ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் எண்ணிக்கையில் சட்டசபை தொகுதிகள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளது திமுக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, ஐயூஎம்எல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அது போல் அதிமுக கூட்டணியில் பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
தவெகவின் நிலைப்பாடு குறித்து தெரியவில்லை. அது போல் பாமக, தேமுதிக, அமமுக யாருடன் கூட்டணிக்குச் செல்வார்கள் என்பது தெரியவில்லை. அநேகமாக அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இந்த கூட்டணி கணக்குகள் தெரிந்து விடும் என தெரிகிறது. இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய தவெக, ஆட்சியில் பங்கு கொடுப்பதாக கூறியுள்ளார். இதைத்தான் விசிக கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்தது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் அது போன்ற ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளில் 117 தொகுதிகள், அதாவது சரி பாதி தொகுதிகளை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாம். அது போல் ஆட்சியில் பங்கு கேட்கவும் முடிவு செய்துள்ளனராம்.
234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெல்ல வேண்டியது உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியே 117 தொகுதிகளை கேட்பதால் அந்த கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொளுத்தி போட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர், முதலில் பாஜகவிடம் இருந்து அதிமுகவை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றட்டும் என்றனர்.