கோடநாடு பங்களாவில் ஆய்வு

கோத்தகிரி: மார்ச் 8: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப். 23-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை, கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல் காதர், ஆய்வுக்கு அனுமதி அளித்து, ஆய்வின்போது வீடியோ பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையில் 3 டிஎஸ்பி-க்கள், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 11 பேர் அடங்கிய சிறப்பு குழு, கோடநாடு எஸ்டேட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.
கொலை நிகழ்ந்த இடம், கொள்ளை நடந்த பங்களா, கோடநாடு பங்களாவின் இதர பகுதிகளை ஆய்வு செய்த குழுவினர், என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் பார்வையிட்டனர். மேலும், ஆய்வு குறித்து குழுவினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளனர்.