கோடிகளை குவித்த பெண் தாசில்தார்

ஹைதராபாத்:மார்ச் 14-
அள்ள அள்ள தங்கம், எடுக்க எடுக்க சொத்து பத்திரமும், கட்டுக்கட்டாக பணமும் சிக்கியிருக்கிறது ஒரு பெண் தாசில்தார் வீட்டில்.. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாசில்தார் வீட்டை அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய போது சுமார் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கரீம்நகர் ஜம்மிகுண்டா மண்டல் தாசில்தார் மற்றும் இணைப் பதிவாளராக இருந்த மார்கலா ரஜனி ஊழல் புகாரில் சிக்கியதற்காக அவர் மீது அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் புதன்கிழமை அன்று தெலங்கானா மாநில ஏசிபி போலீசார் சோதனை நடத்தினார்கள.. இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வங்கி கணக்கில் 25.70 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 1462 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், 31 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள், 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், ரூ.21 லட்சம் மதிப்புள்ள 22 வீட்டு மனை ஆவணங்கள் மற்றும் 50 லட்சம் மதிப்பிலான மூன்று சொத்துகளை வாங்கியதற்கான முன்பண ஒப்பந்த ஆவணங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.