கோடையால் டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரிப்பு: அமைச்சர் தகவல்

ஈரோடு:மே 2: கோடைகாலம் என்பதால், டாஸ்மாக் கடைகளில் பீர் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, என வீட்டுவசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
திமுக தொழிற்சங்கம் சார்பில், ஈரோட்டில் 3 நடமாடும் நீர் மோர் வழங்கும் வாகனங்களைத் தொடங்கி வைத்து, அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி கூறுவது போல, பீர் உற்பத்தியை அரசு அதிகரிக்கவில்லை. ஆனால், கோடை காலத்தில் பீர் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மற்ற மது வகைகளின் விற்பனை குறைந்துள்ளது. தமிழகத்தில் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை அரசு கைவிடவில்லை.
ஆனால், அதில் பல சிக்கல்கள் உள்ளன. பவானிசாகர் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றினால் தண்ணீர் மட்டம் குறைந்து, சில இடங்களுக்கு நீர் வருவது நின்று விடும் எனக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுபோல பலவற்றையும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நீர் நிலைகளைத் தூர்வாராததால் வறட்சி ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஈரோட்டில் அதிக வெப்பம் நிலவுகிறது.
இதற்கு மரங்கள் வெட்டப்பட்டதை சிலர் காரணமாக கூறுகின்றனர். சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. எனினும், மழைக்காலம் தொடங்கும் போது, ஈரோடு மாவட்டத்தில் பெரிய அளவில் மரம் நடு விழா நடைபெற உள்ளது. தற்போது எனது அலுவலகத்தில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக தரப்படுகின்றன. அதை வாங்கி நடவு செய்து பொதுமக்கள் பராமரிக்க வேண்டும். வீடுகளில் மரங்களை நடவு செய்தால் வீட்டு வரியில் சலுகை வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்களை காக்க சென்னையில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீர் பந்தல்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே போன்று ஈரோடு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.ஆர்.எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசுத் துறைகள் மூலம் மக்களுக்கு அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.