கோடை விடுமுறை எப்போது?

சென்னை: ஏப். 5 :தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்.10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6-ம்தேதி முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதிவரை ரம்ஜான் பண்டிகை மற்றும்தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கு மீண்டும்ஏப்.22, 23-ம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து ஏப்.24-ல்தொடங்கி கோடை விடுமுறை தரப்படும். பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26-ம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.