கோடை வெயில் – பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க அரசு திட்டம்

சென்னை: மே. 26 – கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் அதற்கான முன்தயாரிப்பு பணிகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இணையவழியில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, துறையின் இயக்குநர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ‘‘அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழாசிரியர்கள் நியமனம்: பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு இலவச நலத்திட்டப் பொருட்களை உடனே வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். அதேபோல், வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுவதை கண்காணிப்பதுடன், தேவையான தமிழாசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்’’என்றார்.
இந்த கூட்டத்தில் பள்ளி திறப்பை ஒத்திவைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் நிலவுவதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. அந்தவகையில் பள்ளி திறப்பு ஒருவாரம் வரை ஒத்திவைக்கவும், இந்த நாட்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சியை மேற்கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.