கோட்டை விட்ட சென்னை, வேட்டையாடிய தவான்: டெல்லி அணி த்ரில் வெற்றி

சார்ஜா, அக்.17-
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 34வது ஆட்டத்தில் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரண் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் சாம் கர்ரண் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷேன் வாட்சன், டூ பிளஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார்.
சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வந்த இந்த ஜோடியில் ஷேன் வாட்சன் 36(28) ரன்களில் போல்ட் ஆனார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளஸ்சிஸ் 39 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய டூ பிளஸ்சிஸ் 58(47) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டோனி 3(5) ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ராயுடுவுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடி, டெல்லி அணியினரின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.
இறுதியில் ஜடேஜா 33(13) ரன்களும், அம்பத்தி ராயுடு 45(25) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக நார்ட்ஜ் 2 விக்கெட்டுகளும், தேஷ் பாண்டே, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


180 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது துவக்கவீரர் பிருத்விஷா ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட ஆனார். அடுத்து வந்த ரஹானேவும் ஷோபிக்கவில்லை. மற்றொரு துவக்க ஆட்டக்காரரான தவான் ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கொடுத்த 4 கேட்ச் வாய்ப்புகளையும் சென்னை அணியினர் கோட்டை விட்டனர். தவானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவர் 23 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஸ்டைனிசும் அதிரடியாக ஆடி 14 பந்துகளில் 24ரன்கள் எடுத்து அவுட்டானார்அடித்து வந்து கேரியும் அவுட்டாக பரபரப்பான கட்டத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்டத்தில் அக்சர்படேல் தவானுடன் சேர்ந்து வெற்றிபாதைக்கு டெல்லி அணியை அழைத்து சென்றார்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அக்சர் படேல் 3 சிக்சர்களை அடித்து 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தார். மறுமுனையில் தவான் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.