கோதாவரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி

திருப்பதி:, ஜூலை.20-
ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 7 நாட்களாக குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழை வெள்ளத்தில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்டவை வீடுகளுக்கு புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில்அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டத்தில் 3 பேரும், ஏலூர் மாவட்டத்தில் ஒருவரும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஒருவரை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதே போல் நேற்று கோதாவரி மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் மாணவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திரா, தெலுங்கானா மாநில எல்லையான சீதா ராமராஜ் மாவட்டத்தில் தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உடல்களை மீட்டனர். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.