
கொழும்பு: ஜூன். 14 இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தும் உரிமம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதில் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மின்சார வாரிய தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக அவர் சிங்கள மொழியில் பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வெளியானது. அதில் நவம்பர் 24ந் தேதி அன்று, இலங்கை அதிபர் என்னை வரவழைத்து, மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று தெரிவித்தார்.
இந்த விஷயம் தனக்கோ இலங்கை மின்சார வாரியத்திற்கோ சம்பந்தமில்லை என்று நான் சொன்னேன். அதை நான் பரிசீலிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார் என்று பெர்டினாண்டோ அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். அவரது குற்றச்சாட்டிற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பான மின்சாரவாரிய தலைவர் தெரிவித்த கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்த திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.