கோர விபத்து 12 பேர் சாவு

கலபுரகி, பாகல்கோட்டே : ஜூன்3 –
மாநிலத்தின் இரண்டு இடங்களில் நடந்துள்ள கொடூர சாலை விபத்துகளில் 12 பேர் இறந்திருப்பதுடன் பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. தனியார் சொகுசு பஸ் மற்றும் டெம்போவுக்கிடையே கலபுரகி மாவட்டத்தின் கமலாபுரா அருகில் இன்று காலை நடந்த விபத்தில் பஸ் தீ பற்றி கொழுந்து விட்டு எறிந்ததில் அதில் இருந்த 8 பயணிகள் உயிருடன் எரிந்து கருகியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. கோவாவிலிருந்து ஹைதராபாதிற்கு சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் ஹைதராபாதிலிருந்து கலபுரகிக்கு வந்து கொண்டிருந்த டெம்போ ஆகிய இரண்டும் பயங்கரமாக மோதிக்கொண்டுள்ளன. கமலாபுரத்தின் புறப்பகுதியில் நடந்த இந்த விபத்தில் பஸ் உருண்டு விழுந்து தீ பற்றி கொண்டு கொழுந்து விட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த தீயை அணைக்க அருகில் இருந்தவர்கள் எவ்வளோவோ முயன்றும் பஸ்ஸின் அருகேயே நெருங்கமுடியாத அளவிற்கு யாருமே உதவி புரிய முடியாமல் நின்று கண் எதிரில் பயணிகள் தீயில் எரிந்து கருகுவதை பார்த்து மனம் வெதும்பவேண்டிதாயிற்று . பஸ் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும்போதே 12 பேர் பஸ்ஸிலிருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்குண்ட பஸ்ஸில் 35 பயணியர் இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுனர்களின் அஜாக்ரதையே இந்த விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனேயே தீயணைப்பு ஊழியர்கள் விரைந்து வந்து காயமடைந்தோரை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட அதிகாரி இஷாபந்த் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். இந்த விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் ஹைதராபாதை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. தவிர இந்த விபத்தில் டெம்போ ஓட்டுனரின் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. அவனையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதே போல் பஞ்சர் ஆகியிருந்த கேன்டர் வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி அதன் சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியதில் நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் தேசிய நெடுஞசாலை 208ன் பாடகண்டி அருகில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. பீலகி பட்டணத்தை சேர்ந்த ராமசாமி , ரஜாகசாப் , மல்லப்பா மற்றும் நாசீர் ஆகியோர் இந்த விபத்தில் இறந்தவர்கள் . ஹூப்ளி – சோலாப்பூர் தேசிய நெடுஞசாலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சாலை ஓரத்தில் நின்றிருந்த கேன்டர் வாகனம் மீது மற்றொரு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது. வாகனம் பஞ்சர் ஆகியிருந்ததால் வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு அதன் சக்கரங்களை மாற்றும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு பீலகி போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து கொண்டிருப்பதுடன் விபத்தை நடத்திவிட்டு தப்பியோடியுள்ள வாகனம் மற்றும் அதன் ஒட்டுட்டுனரை மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர்.