கோவிலுக்குள் சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம் – போராட்டத்தால் பதட்டம்

திஸ்பூர்: ஜன.22-
அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். கடந்த வியாழனன்று யாத்திரை அசாம் மாநிலத்தில் நுழைந்தது. அங்கு வந்தது முதல் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை விமர்சித்து வருகிறார். இந்தியாவிலேயே அதிகளவு ஊழலில் அதிகளவு திளைத்த முதல்வர் என பாஜ முதல்வர் ஹிமந்தா தான் என அவர் பேசி வருகிறார்.நேற்று முன்தினம் வடக்கு லக்கிம்பூரில் ராகுலின் யாத்திரையை வரவேற்கும் போஸ்டர்கள், பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். மேலும் அதில் பங்கேற்றவர்கள் வந்த வாகனங்களை அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே நேற்றும் யாத்திரையின் போதும் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில் அசாமில் நகோன் மாவட்டத்தில் உள்ள படாதிராவதான் கோயிலுக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது, அவரைத் தடுத்து நிறுத்தி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்காததால் காங்கிரஸ் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‘கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகுதான் அனுமதி என அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கோவில் வாசலிலேயே அமர்ந்து பக்தி பாடல்கள் பாடி ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.