கோவையில் ஐ.எஸ். இயக்க ஆதரவான 50 இளைஞர்கள் கண்டுபிடிப்பு

கோவை: நவம்பர். 5 -கோவையில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. முபின் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாளராக செயல்பட்டு விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உளவுத்துறை போலீசார் முபினை போல ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் உள்ளனரா? என்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கோவை மாவட்டம் முழுவதும் 50 இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தின் கருத்துக்களுக்கு ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் யார்? யார் என்ற விபரங்கள் அனைத்தையும் உளவுத்துறை போலீசார் சேகரிக்க தொடங்கினர். தற்போது இந்த இளைஞர்களை கண்டுபிடித்துள்ள போலீசார் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்த பிறகு விசாரணை தீவிரமாக நடந்தது. அந்த விசாரணையில் தான் மாவட்டம் முழுவதும் 50 வாலிபர்கள் ஐ.எஸ். கருத்துக்கு ஈர்க்கப்பட்டு ஆதரவாக இருந்த தகவல் தெரியவந்தது. அவர்களை அனைவரையும் கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு உலமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலமாக நல்வழி பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக பிரத்யேகமாக ஒரு திட்டத்தையும் தொடங்க உள்ளோம். அந்த திட்டத்தில் இளைஞர்களை பங்கு பெற வைத்து, அவர்களை அதில் இருந்து மீட்டு கொண்டு வருவது, தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கருத்துக்களை போதிக்க உள்ளோம். மேலும் அவர்களுக்கு உலமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை போதித்து, அவர்களை நல்ல ஒரு குடிமகனாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதனை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.