கோவையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் – போலீஸ் விளக்கம்

கோவை: நவம்பர். 12 -கோவை மாவட்டத்தின் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மெயிலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பட்டாசுகளை வெடித்து மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று அசம்பாவீதங்கள் ஏற்படாமல் பாதுகாப்புடன் மக்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் கோவை மாநகரம், கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்து உள்ளது. அதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் உஷாராகினர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொழுதுபோக்கு தளங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு, கோவையில் குண்டு வெடிக்கும் என்று வெளியான மின்னஞ்சல் வதந்தி என்று போலீசார் தெரிவித்து உள்ளார்கள். பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சலை அனுப்பி பரபரப்பை கிளப்பியது யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வரும் இந்த நாளில், குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டல் மெயிலால் கோவை முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.