கோஹ்லிக்கு ராகுல் டிராவிட் பாராட்டு

ஜொகனர்ஸ்பர்க், ஜன. 3- இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு, 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.
இதனை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக நீக்கியது. இந்த விவகாரம் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், விராட் கோலி தற்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்குவதற்கு முன்னர் அவருக்கு போதிய கால அவகாசம் கொடுக்கவில்லை என்று பிசிசிஐ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போதும் கடந்த 20 நாட்களாக கோலி அசத்தலாக செயல்பட்டு வருகிறார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிராட் அவர் கூறுகையில், கோலியை சுற்றி நிறைய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது என்பது எனக்கு தெரியும். ஆனால் உண்மையை சொல்லப்போனால், மன உறுதியை உயர்வாக வைத்திருப்பது மிகவும் கடினம் அல்ல என்பதை கேப்டன் கோலி வழிநடத்துகிறார்.
நாங்கள் இங்கு (தென் ஆப்பிரிக்கா) வந்த கடந்த 20 நாட்களாக பயிற்சியில் ஈடுபடுவதிலும், அணியுடன் இணைந்து செயல்படுவதிலும் கோலி அசத்தலாக செயல்பட்டு வருகிறார்’ என்றார்.