
மணிலா: அக்.17-
பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குக் கடந்த வாரம் தான் இரு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 12 கோடி தான். இது ரிங் ஆஃப் பையர் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 4:33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு 90 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பதறியபடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் எந்தளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் தான் தெற்கு பிலிப்பைன்ஸில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு ஓரே வாரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. அப்போது அக்டோபர் 10ம் தேதி மிண்டனாவோ பிராந்தியத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது..














