சங்கிலி தொடர் விபத்து; 7 பேர் பலி

விஜயநகர், அக்.9-
ஹோஸ்பேட்டை தாலுகா வியாசனகேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் டிப்பர், லாரி, குரூசர் இடையே பயங்கர தொடர் விபத்து ஏற்பட்டு சிறுவன், பெண் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். ஹோஸ்பேட்டையைச் சேர்ந்த உமா (45), கெஞ்சவ்வா (80), பாக்யா (32), அனில் (30), கோனி பசப்பா (65), பீமலிங்கப்பா (50), பாலகா யுவராஜா (4) ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் சிலர் படுகாயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த விபத்தில் குரூஸர் முற்றிலும் நொறுங்கியது. டிப்பரின் முன்பகுதி சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. மற்றொரு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. விஜயநகர் மாவட்டம் ஹர்பனஹள்ளி தாலுகாவில் உள்ள கூலஹள்ளி கோனிபசவேஸ்வரா கோவிலுக்கு குரூசர் வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூசர் வாகனத்தில் 13 பேர் இருந்ததாகவும், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் ஹோஸ்பேட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஜயநகர் எஸ்பி ஸ்ரீஹரிபாபு சம்பவ இடத்திலிருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களும் போலீசாருக்கு உதவி செய்தனர்.
விபத்துக்குள்ளான வாகனம் ஹோஸ்பேட்டையைச் சேர்ந்தது என்றும், உயிரிழந்த அனைவரும் ஹோஸ்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. சில கி.மீ தூரம் சென்று இருந்தால் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பியிருப்பார்கள். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது. அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஹோஸ்பேட்டை தாலுகா மாரியம்மனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.