சசிகலா இளவரசிக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட்

பெங்களூரு,செப். 5: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5-ந் தேதி விடுவிக்கப்பட்டார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா 2017-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும், இருவருக்காகவும் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.