சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி -கெஜ்ரி அறிவிப்பு

டெல்லி: அக்டோபர் .10 ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இம்மாநிலங்களில் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆம் ஆத்மி தனித்து போட்டி: இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மியின் இந்த தனி ஆவர்த்தனம் காங்கிரஸை ரொம்பவே அத்ருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் காங்கிரஸ்: ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையேதான் போட்டி இருந்து வந்தது. பாஜகவின் கடந்த கால ஆட்சியின் செயல்பாடுகள் சத்தீஸ்கர் மக்களை ரொம்பவே கொந்தளிக்க வைத்தது. இதனால் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுத்தனர் மக்கள். இதனை முதல்வர் பூபேஷ் பாகெல் சரியாகப் பயன்படுத்தி பாஜகவை தலைதூக்க விடாமல் செய்து வைத்துள்ளார். இப்போது ஆம் ஆத்மியும் சத்தீஸ்கரில் களமிறங்கினால் காங்கிரஸுக்கு நெருக்கடியைத் தரக் கூடும் என்கிற அச்சம் அக்கட்சியினருக்கு உள்ளது. ராஜஸ்தானில் பெரும் சிக்கல்: இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கும் என்பது கருத்து கணிப்புகளின் முடிவுகள். காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக கூறப்படும் நிலையில் ஆம் ஆத்மியும் களமிறங்குவது காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
“இந்தியா” அணிக்கு கொள்ளி?: இத்தனைக்கும் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ” இந்தியா” கூட்டணியில்தான் இருக்கின்றன. இந்த 3 மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியாக களமிறங்கினால் லோக்சபா தேர்தலுக்கான சரியான முன்னோட்டமாக பார்க்க முடியும்; ஆனால் லோக்சபா தேர்தல் வரைக்குமே ‘இந்தியா’ கூட்டணி தாங்காது என்பதைப் போல அந்த கூட்டணிக்குக் கொள்ளி வைக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி அடம்பிடித்து தனித்துப் போட்டியிடுவது கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.