சட்டசபை தேர்தல்: குஜராத்தில் வெற்றி யாருக்கு?

குஜராத்,நவ.4-குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை அறிவிக்கப்பட்டாயிற்று, குஜராத் சட்டசபை தேர்தல் திருவிழா. நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது. திரைப்படங்களுக்கு பூஜை போடுகிற நாளிலேயே படம் விலை போய்விடுகிறமாதிரி, தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டிலேயே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. 182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இங்கு வெற்றி வாகை சூடி, 1995-ம் ஆண்டு தொடங்கி சுவைத்து வருகிற வெற்றிக்கனியை மீண்டும் சுவைத்துவிட பா.ஜ.க. துடிக்கிறது.
ஆட்சியை பறிகொடுத்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது, இந்த முறையாவது வெற்றி பெற்று, ஆட்சியைப்பிடித்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறது காங்கிரஸ். ஆனால் டெல்லி, பஞ்சாபில் வெற்றி பெற்று, இப்போது ஆம் ஆத்மியின் பார்வை குஜராத் பக்கம் திரும்பி இருக்கிறது. 2024 தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று கனவு வளர்த்து களத்தில் குதிக்கிறது, கெஜ்ரிவாலின் கட்சி. மும்முனைப் போட்டி தேர்தல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு அணுவளவும் இடம் இல்லை. இந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பதே நாட்டின் பேசுபொருளாக மாறப்போகிறது.