சட்டசபை தேர்தல் -முதல்வர் பெமா உட்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

அருணாச்சலப் பிரதேசம், மார்ச் 29- அருணாச்சலப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. இங்கு வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இங்குள்ள 2 மக்களவை தொகுதிகளில் 15 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு மொத்தம் உள்ள 60 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 34 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இவர்கள் தவிர தேசிய மக்கள் கட்சி 29 வேட்பாளர்களையும், என்சிபி 17 வேட்பாளர்களையும், அருணாச்சலப் பிரதேசமக்கள் கட்சி 2 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது.5 சட்டப் பேரவை தொகுதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இங்கு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள முக்தோ சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் பெமா காண்டு போட்டியிடுகிறார். இவர் இதே தொகுதியில் 3 முறை போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தற்போது 4-வது முறையாக இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். இங்கு மேலும் 4 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர்.
இதனால் இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள 4 பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர். இங்கு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 41 இடங்களில் வென்று முதல் முறையாக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.