சட்டம் – ஒழுங்கு நிலவரம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, ஜனவரி. 19 – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, காவல்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் இறையன்பு ,தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுதல், சட்டம்- ஒழுங்கை நல்ல முறையில் பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவது குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.