சட்ட நிபுணர்களுடன் தமிழக கவர்னர் ஆலோசனையால் பரபரப்பு

சென்னை: ஜன.11-
சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டம், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது, அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையில், சில பகுதியை தவிர்த்துவிட்டு ஆளுநர் உரையை வாசித்தார். இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததற்கு வருத்தம் தெரிவித்ததுடன், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறும். இவை தவிர்த்து ஆளுநர் பேசியது இடம்பெறாது என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தை வாசித்து முடிக்கும்போது, பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறினார். அவர், தேசிய கீதம் பாடும் முன்னரே வெளியேறியது சர்ச்சைக்குள்ளாகியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் தலைமை வழக்கறிஞர், திமுகவின் வழக்கறிஞர் அணியின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆளுநர் மீது உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வில் வழக்கு தொடர்வது குறித்த கருத்து பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், ஆளுநரும் இந்த விவகாரம் தொடர்பாக சட்டநிபுணர்களை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆளுநர் உரையை வாசிக்கும் போது இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும், சட்டப்பேரவை விதிகள் மீறப்பட்டதா? என்பது குறித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற்று தவிர்த்தவை மீண்டும் அவைக்குறிப்பில் தீர்மானம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.