சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினர்- போலீசார் அதிரடி சோதனை

பெங்களூரு, ஏப். 2: விசா காலாவதியான பிறகும், பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரின் வீடுகளில் சிசிபி போலீஸார் சோதனை நடத்தினர்.
பாஸ்போர்ட்டு மற்றும் விசாக்கள் காலாவதியான போதிலும், சில வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக நகரில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சோதனைகள் நடத்தப்பட்டு தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பானசவாடி, சுப்பையன்பாளைய, சிவாஜிநகர், ராமமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக குடியேறிய ஆப்பிரிக்கர்கள் உள்ளிட்ட பிற வெளிநாட்டினரின் விசா மற்றும் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் எங்கு சட்டவிரோதமாக குடியேறினர், அவர்களின் தொழில் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அத்தகையவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மாணவர் மற்றும் வணிக விசாவில் ஊருக்கு வந்த வெளிநாட்டினர் சிலர் விசா காலாவதியான நிலையிலும் சட்டவிரோதமாக தங்கி போதைப்பொருள் விற்பனை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரியவந்ததையடுத்து போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.